BREAKING NEWS

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த சீனா

1164

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு, சீனாவில் உள்ள 3 நிறுவனங்கள் மருந்தை உருவாக்கியுள்ளதாகவும், அதை மனிதர்களுக்கு பயன்படுத்தி சோதனை நடத்த சீன அரசு அனுமதி வழங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் ஊகான் நகரில் தொடங்கி,  அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளையும் ஒரு கை பார்த்துவிட்ட கொரோனாவுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 28 ஆயிரத்தை கடந்து விட்ட நிலையில், பாதிக்கப்பட்டிருப்போர் அளவும் 2 லட்சத்து 17 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது.

அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு நாள்தோறும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி வரும் நிலையில், பலி எண்ணிக்கை 2 லட்சத்தை கடக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்பே கூறியுள்ளார். அந்த அளவுக்கு கொரோனா வைரசின் தாக்கம் படுபயங்கரமாக இருக்கும் நிலையில், சீனாவில் உள்ள 3 நிறுவனங்கள் தடுப்பூசியை உருவாக்கியிருப்பதாக தெரிவித்துள்ளன.

சீனாவில் தலைநகர் பெய்ஜிங்கில் செயல்பட்டுவரும் Sinovac biotech என்ற நிறுவனம் கடந்த மார்ச் மாதத்திலேயே கொரோனா வைரசுக்கு தடுப்பூசியை உருவாக்கி விட்டதாக தகவல் வெளியானது. அந்த மருந்தை பயன்படுத்தலாமா? என்பது குறித்த ஆய்வு முடிவுகள் வெற்றிபெற்றதை அடுத்து, மனிதர்களுக்கு பயன்படுத்தி சோதனை செய்து பார்க்க மார்ச் இறுதியிலேயே சீன அரசு அனுமதி வழங்கியது. மனிதர்களுக்கு மருந்தை செலுத்தி சோதனை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது மேலும் இரு நிறுவனங்கள், கொரோனா வைரசுக்கு தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளன.

சீன ராணுவத்தின் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனமான Cansino biotech மற்றும் Wuhan Institute of biological products ஆகிய நிறுவனங்கள் தனித்தனியே இரண்டு கொரோனா தடுப்பூசிகளை கண்டுபிடித்திருப்பதாக சீன அரசிடம் தெரிவித்தன. மேலும், கொரோனா வைரசை கொல்லும் திறன் இருப்பதாகக் கூறி, அது தொடர்பான அறிக்கையையும் தாக்கல் செய்த அந்த நிறுவனங்கள், மனிதர்களுக்கு செலுத்தி  பரிசோதனை நடத்த அனுமதி கோரியிருந்தன. அதற்கு சீன அரசும் அனுமதி தந்திருப்பதால், சில நாட்களில் தடுப்பூசி சந்தைக்கு வரும் என பரவலாக கூறப்பட்டது.

ஆனால், ஒரு தடுப்பூசியை கண்டுபிடித்தவுடன் அதை உடனடியாக மனிதர்களுக்கு செலுத்தினால், பாதிப்பு என்ன வருகிறது? பக்க விளைவுகள் என்ன உண்டு? போன்றவை தெரியாது. எனவே, தற்போது மனிதர்களுக்கு செலுத்தும் தடுப்பூசியை சுமார் 6 மாதங்கள் வரை பரிசோதனை செய்துவிட்டு, அதன்பிறகே சந்தைக்கு கொண்டு வருவார்கள் என விபரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, கொரோனா தடுப்பூசி குறைந்தபட்சம் 6 மாதத்தில் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். ஆனால் நாம் அதுவரை அரசு கூறியுள்ள நடைமுறைகளை கடைபிடித்து பாதுகாப்பாக இருப்போம்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *