BREAKING NEWS

மண் வளத்தை மேம்படுத்தும் உயிர் உரங்கள்:

727

உயிர் உரங்கள்:

உயிர் உரங்கள் என்பவை பயன்படுத்தத் தயார் நிலையில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிரிகளாகும். இவற்றை விதை, வேர் மற்றும் மண்ணில் இடுவதன் மூலம் அவற்றின் உயிரியல் செயல்பாடுகள் மூலம் மண்ணின் ஊட்டச்சத்துக்களை பயிருக்கு அருகில் எடுத்து அளிக்கின்றன. அதோடு மண்ணில் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்து மண் வளத்தை மேம்படுத்துகின்றன.
பயிரின் மகசூலை இவை 20-30% வரை அதிகரிக்கின்றன.
இராசாயன தழை மற்றும் மணிச்சத்து உரங்களை 25% இடம்பெயரச் செய்கின்றன.
பயிர் வளர்ச்சியை துரிதப்படுத்துகின்றன.
மண்ணின் உயிர்த்தன்மையை உயிர்ப்பிக்கின்றன.
மண்ணின் இயற்கை வளத்தை திரும்பப் பெறச் செய்கின்றன.
வறட்சி மற்றும் சில மண்ணின் வழி பரவும் நோய்களிலிருந்து பாதுகாக்கின்றன.

பசுந்தாள் உரமிடல்:

பசுந்தாள் உரமிடல் என்பது குறுகிய கால, சதைப்பற்றுள்ள, இலைப் பகுதிகள், உரமாகும் பயறு வகைச் செடிகள் போன்ற பயிர்களைப் பயிரிட்டு அவை காய்பிடிக்கும் முன்பு அவற்றை அதே நிலத்தில் உழவு செய்வதாகும்.
மரங்கள் அல்லது பயறு வகைப் பயிர்களின் மேற்பகுதியை வெட்டி வயலில் இட்டு உழவு செய்வது பசுந்தழை உரமிடலாகும். பசுந்தாள் உரமிடுவது தழைச்சத்தினை அதிகரிப்பதுடன் அதை பயன்படுத்தும் தன்மையையும் அதிகரிக்கின்றது. அதோடு மண்ணின் ஈரப்பதத்தினை தக்க வைத்து, உபயோகிக்கும் தன்மையை அதிகரிக்கின்றது.

மட்கு உரம்:

நன்கு மட்கச் செய்த அங்ககப் பொருட்களான பயிர்க் கழிவுகள், கால்நடைச் சாணங்கள், சிறுநீர் மற்றும் வீணான தீவனங்கள் போன்றவையே மட்கு உரங்களாகும். இவை அடர் நிறம் கொண்ட, இனிய நறுமணத்துடன் சத்துக்கள் நிறைந்த உரங்களாகும். மண்ணின் அங்ககத் தன்மையை அதிகரிக்கின்றன. மண்ணின் நீர்பிடிப்புத் தன்மையை அதிகரிக்கின்றன.

மண்புழு உரமிடல்:

மண்புழுவினால் உருவாக்கப்படும் பயிருக்குத் தேவையான சத்துக்கள் கொண்ட அதன் கழிவிலிருந்து கிடைப்பவையே மண்புழு உரமாகும். மணமற்ற, சுத்தமான, தேவையான அளவு தழை, மணி, சாம்பல் மற்றும் பல பயிர் வளர்ச்சிக்குத் தேவையான நுண்ணுாட்டச்சத்துக்களைக் கொண்டவையாகும். பெரும்பாலும் அங்கக வேளாண்மையால் ஊட்டச்சத்து ஆதாரமாக இவை உபயோகிக்கப்படுகின்றன. இவை குறைந்த இடுபொருள் கொண்ட, மறுசுழற்சி செய்யப்பட்ட விஷத்தன்மையற்ற,சுற்றுச்சூழலுக்கு ஏற்ற உயிரியல் பொருளாகும்.

தென்னை நார் உரம்:

இது தென்னை நார்க்கழிவு மற்றும் நார்த்துகள் எனவும் அழைக்கப்படுகின்றது. தென்னை நார்த் தொழிற்சாலைகளின் உபபொருளான நாரிலிருந்து தயாரிக்கப்படும் அங்கக உரம் இது. இதில் பேரூட்டச்சத்துக்களும், நுண்ணூட்டச் சத்துக்களும் அடங்கியுள்ளன. இது நீர் பிடிப்புத் தன்மையை அதிகரிக்கின்றது.
இது மண்ணில் காற்றோட்டத்தை அதிகரிக்கின்றது. இது வேர் அதிக ஆழத்திற்கு செல்ல உதவுகின்றது. சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு அற்ற உரம்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *